சுடச்சுட

  

  "தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க விரைவான நடவடிக்கை'  

  By DIN  |   Published on : 14th August 2019 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
   தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்களில், மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி முன்னிலை வகித்தார்.
   இந்தக் கூட்டத்தில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது :
   காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, காவிரி ஆற்றில் ஓடும் நீரானது சேறு, கலங்கலாக உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது காவிரியில் நீர்வரத்துக் குறைந்து வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
   மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகள், டிராக்டர்கள் மூலமாவும் குடிநீர் எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு வழங்கலாம். இதற்காக அரசு அதிகாரிகளுக்கு உரிய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அனைத்து குடியிருப்புப் பகுதிகளையும் தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும். தெரு விளக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
   தொடர்ந்து தருமபுரியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நிரப்புவது குறித்து, ஏற்கெனவே தமிழக முதல்வரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
   காவிரியில் இருந்து உபரி நீர் எடுப்பதற்கு காவிரி ஆணையத்தில் அனுமதி பெறவேண்டியுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai