மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை  நிறைவேற்றுவது எப்போது?

ஒகேனக்கல் காவிரியில் கரைபுரண்டோடும் காவிரி நீரை, தருமபுரி மாவட்ட விவசாயிகள், பாசனத்துக்குப் பயன்படுத்த இயலாமல் பரிதவிக்கின்றனர்.

ஒகேனக்கல் காவிரியில் கரைபுரண்டோடும் காவிரி நீரை, தருமபுரி மாவட்ட விவசாயிகள், பாசனத்துக்குப் பயன்படுத்த இயலாமல் பரிதவிக்கின்றனர்.
இந் நிலை மாற, மிகை நீர் தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது விவசாயிகள், அரசியல் கட்சிகளிடையே வலுத்து வருகிறது. கர்நாடகத்திலிலிருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீர், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டி, அங்கிருந்து கடந்து செல்கிறது.
 ஆனால், ஆண்டுகள் பல கடந்தும், கண் முன் மழை, வெள்ளக் காலங்களில் கடந்து செல்கிற காவிரி நீரை, பாசனத்துக்குப் பயன்படுத்த இயலாத நிலைதான் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, தருமபுரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணை என இரண்டு ஆறுகள் கடந்து சென்றாலும், அவற்றை பாசனத்துக்குப் பெரிய அளவில் பயன்படுத்த இயலவில்லை.
இதில், காவிரி ஆறு, தமிழகத்தில் 416 கி.மீ. பயணத்தை தருமபுரியில் தொடங்கி, தஞ்சை டெல்டா வரை சென்று அங்கு, பாசனத்திற்கு தன்னை அர்ப்பணித்து வருகிறது. இருப்பினும், இவ் வழியாக நீர் கடந்து சென்றாலும், காவிரி குடிநீர் பெறுவதற்கே இப்பகுதி மக்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர்.
வானம் பார்த்த பூமியாக உள்ள இந்த மாவட்ட நிலங்கள் மழையை நம்பி மட்டுமே உள்ளன. இதனால், மழை பொய்ப்பின் இம் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் முற்றிலும் காய்ந்து விவசாயிகளுக்கு பேரிழிப்பை ஏற்படுத்துகின்றன.
இதில் கடந்த ஆண்டு, சராசரியை விட மிகக்குறைவான அளவே மழைப் பதிவானதால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், நட்ட பயிரை காக்க இயலாமல் அனைத்தும் காய்ந்து கருகின. அதேவேளையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒகேனக்கல் காவிரி வழியாக மிகை நீர் யாருக்கும் பயன்படாமல் கடலில் கலந்தது.
ஒருபுறம் வறட்சி, மறுபுறம் பயனற்றுக் கடலில் கலந்த நீர். இதைத் தவிர்க்க, நீரை, பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் தீட்ட வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை முன் வைத்தனர். 
காவிரியில் வெள்ளக் காலங்களில் மிகையாக செல்லும் நீரை, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்குக் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர், சூழலியல் ஆர்வலர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து உபரி நீரை, பென்னாகரம் மடம் அருகே உள்ள ஏரிக்கு முதலில் கொண்டு வந்து நிரப்புவது என்றும், பின்பு அங்கிருந்து மாவட்டத்திலுள்ள ஏனைய ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட நிர்வாகமும் இத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பியது.
இந்த நிலையில், தற்போது, கடந்து சில நாள்களாக, கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விட்ட வெள்ள நீர், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக ஒகேனக்கல்லில் நீர் கரைபுரண்டு ஓடியது.
இதைக் காணும் விவசாயிகள், கடந்த ஆண்டே காவிரி நீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்தி இருந்தால், நிகழாண்டு செல்லும் வெள்ள நீரை ஏரிகளில் நிரப்பியிருக்கலாம் என ஆதங்கம் தெரிவித்தனர்.
திமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, விவசாய அமைப்புகள் தற்போது காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலுவாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆகவே, இனி வருங்காலங்களிலாவது உபரிநீரை தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், ஏரிகளுக்குக் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த மாவட்ட விவசாயிகளின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com