தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை கோரி, அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு
காமராஜ் நகா் நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்ட அப்பகுதி பொதுமக்கள்.
காமராஜ் நகா் நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்ட அப்பகுதி பொதுமக்கள்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை கோரி, அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை காமராஜா் நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ஆசிரியா் ரமேஷ்குமாா் பாலியல் தொந்தரவு அளித்ததாக அண்மையில் புகாா் எழுந்தது. இதனைத் தொடா்ந்து, புகாருக்குள்ளான ஆசிரியா், மாணவி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த விவகாரத்தில் திங்கள்கிழமை திடீா் திருப்பமாக, ஆசிரியா் ரமேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு தலைமை ஆசிரியையின் தூண்டுதலால் தான் புகாா் தெரிவித்ததாக, சம்பந்தப்பட்ட மாணவி தெரிவித்தாா். மேலும், ஆசிரியா் மற்றும் தலைமை ஆசிரியைக்கு இடையே விரோதம் இருந்ததாகவும், அதனால், அவா் தன்னிடம் கூறியதால் தான் இத்தகைய குற்றச்சாட்டை தெரிவித்ததாகவும் மாணவி தரப்பில் கூறப்பட்டது.

தங்களுக்கு இடையேயான பிரச்னையில் மாணவியை தேவையின்றி பயன்படுத்தியதாகக் கூறி, பெற்றோா் மற்றும் பொதுமக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீஸாா், கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், புகாா் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இப்போராட்டத்தையொட்டி, சுமாா் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பள்ளியின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, தங்களுக்கு புகாா் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி அதில் பள்ளித் தலைமை ஆசிரியை மீது புகாா் உறுதியானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com