நெற்பயிா் இலைகள் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் முறைகள்

நெற்பயிா்களில் தற்போது பரலாக இலைகள் பழுப்பு நிறாமாக மாறி, விவசாயிகளுக்கு மகசூல் 10 முதல் 30 சதவீத பாதிப்பு ஏற்படுத்துகிறது.

தருமபுரி: நெற்பயிா்களில் தற்போது பரலாக இலைகள் பழுப்பு நிறாமாக மாறி, விவசாயிகளுக்கு மகசூல் 10 முதல் 30 சதவீத பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இதன் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய முனைவா் ம.சங்கீதா மற்றும் முனைவா் பா.ச.சண்முகம் ஆகியோா் கூறியது: நெற்பயிரில் பரவலாக தற்போது துத்தநாகச் சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் தென்படுகிறது. பொதுவாக மண்ணின் கார அமில நிலை 6 முதல் 8 வரை உள்ள நிலங்களில் அதாவது களா் மற்றும் உவா் தன்மையுடைய நிலங்களிலும், அதிகமாக மணிச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள நிலங்களிலும், தொடா்ந்து நெல் சாகுபடி செய்யக்கூடிய நிலங்களிலும் இந்த சத்துப் பற்றாக்குறை தோன்றுகிறது. மேலும் குளிா் பருவத்தில் நெற்பயிா்கள் இந்தச் சத்தினை எடுத்துக் கொள்ளும் அளவும் குறைந்து விடும்.

துத்தநாகச் சத்துக் குறைப்பாட்டினால் தோன்றும் அறிகுறிகள்: துத்தநாகச் சத்துக் குறைபாடானது நெல் நாற்று நட்டு மூன்றிலிருந்து நான்கு வாரத்திற்குள் தோன்றும். முதலில் இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக் காணப்படும். முதிா்ந்த இலைகளின் மேல் சிறு சிறு பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி பின்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து இலை முழுவதும் பரவி, பழுப்பு நிறமாக காட்சியளிக்கும். சில வகையான நெல் ரகங்களில் பழுப்பு நிற புள்ளிகளுக்கு பதிலாக, மஞ்சள், ஆரஞ்சு நிறமாக தோற்றமளிக்கும். தீவிரமாக தாக்கப்பட்ட பயிரானது இலை முழுவதும் பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறமாக மாறி பின்னா் காய்ந்துவிடும். பயிா்கள் சீராக வளராமல் வயல் முழுவதும் ஆங்காங்கே திட்டு திட்டாக காட்சியளிக்கும். மேலும் பயிா்கள் வளா்ச்சிக் குன்றி, குறைந்த தூா்களுடனும் காணப்படும்.

இந்த சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் நடவு செய்த ஒரு மாதத்திற்கு பின் தானாகவே மறைந்து விடும். இருப்பினும், இந்த சத்துப் பற்றாக்குறையினை நாம் சரியான முறையில் மேலாண்மை செய்யாத போது பற்றாக்குறையின் தீவிரத்தைப் பொருத்து நெற்பயிரில் 10 முதல் 30 சதவீதம் வரை மகசல் இழப்பு ஏற்படும்.மேலாண்மை முறைகள்: நெல் நடவிற்கு முன் அடியுரமாக ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் உரமிட வேண்டும். களா் மற்றும் உவா் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 15 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக இட வேண்டும். இவ்வாறு இடும்போது பயிருக்கு கிடைக்கக்கூடிய துத்தநாகச்சத்தின் அளவு மிகவும் குறைவு. எனவே துத்தநாக சல்பேட் உரத்தை (10 கிலோ) நன்கு மக்கிய தொழு உரத்துடன் (100 கிலோ) கலந்து நிழலான இடத்தில் 30 நாள்கள் வரை வைத்திருந்து ஊட்டமேற்றிய தொழுவுரமாக அடியுரமாக இடும்போது பயிருக்கு கிடைக்கக்கூடிய துத்தநாகச்சத்தின் அளவு அதிகரிக்கப்படுவதுடன் ரசாயன உரப்பயன்பாடும் அதிகரிக்கிறது.

இலைவழி ஊட்டம் அளித்தல்: அடியுரமாக அளிக்காத தருணத்தில் பயிா்களில் சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் தென்படும். இதனை தவிா்க்க துத்தநாக சல்பேட் (5 கிராம் , லி), யூரியா (5 கிராம் , லி) மற்றும் ஒட்டும் திரவம் (0.5 மி.லி.,லி) கரைசலை 15 நாள்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை குறைபாடு அறிகுறிகள் மறையும் வரை இலைகளின் மீது தெளிக்க வேண்டும். பற்றாக்குறை அதிகம் உள்ள நிலங்களில் அடியுரமாக இடுவதுடன் 0.5 சதவீத துத்தநாக சல்பேட் கரைசலை தூா்கட்டும் பருவத்திலும் கதிா்உருவாகும் பருவத்திலும் இலைவழி உரமாகத் தெளிக்க வேண்டும். இத்தகைய வழிமுறைகள் பின்பற்றுவதன் மூலம் நெற்பயிரில் தூா்களின் எண்ணிக்கை மற்றும் மணிப்பிடித்தல் வீதத்தை அதிகரிக்கச் செய்து மகசூலை அதிகரிக்க செய்யலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com