சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தருமபுரி வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் 30-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா,  மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் பிப். 4 முதல் 10-ஆம் தேதி வரையிலும், சாலைப் பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு எனும் கருப்பொருளை மையப்படுத்தி, மாவட்டம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு ஊர்வலங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து குறும்படங்கள் வழியாகவும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. 2017-ஆம் ஆம் ஆண்டை விட, 2018-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் 4 சதவீதம் குறைந்துள்ளன. தருமபுரி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டில் 1,447 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 204 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதை முற்றிலுமாக தவிர்க்க, சாலையில் நடந்து செல்பவர்கள் உள்பட அனைத்து வாகன ஓட்டுநர்களும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
 மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிந்தும், கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும். 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை வாகனங்கள் ஓட்டுவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என்றார்.
முன்னதாக, சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். 
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், தருமபுரி சார்-ஆட்சியர் ம.ப.சிவன் அருள், சேலம் துணை போக்குவரத்து ஆணையர் சத்தியநாராயணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்ஆர்.செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், ராஜாமணி, அன்புச்செழியன், மாவட்டக் கல்வி அலுவலர் பொன்முடி, தருமபுரி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com