தருமபுரி கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

தருமபுரி கோட்டை அருள்மிகு  ஸ்ரீ பரவாசுதேவ சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

தருமபுரி கோட்டை அருள்மிகு  ஸ்ரீ பரவாசுதேவ சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
தருமபுரி கோட்டை பகுதியில் அருள்மிகு  ஸ்ரீ வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ சுவாமி திருக்கோயில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக்கோயிலின் நுழைவு வாயிலில், ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இப் பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை யாக சாலை மற்றும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. இந்த விழாவில், சாலை விநாயகர் கோயிலிருந்து திரளான பெண்கள், பக்தர்கள், தீர்த்தக்குடங்களுடன் கோட்டை பரவாசுதேவ சுவாமி திருக்கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரையிலும், முதல்கால யாக சாலை பூஜைகள், சனிக்கிழமை காலை 6 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி, வேதபாராயணம் நடைபெற்றது. மேலும், இரண்டு மற்றும் மூன்றாம்கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை சுப்ரபாத சேவை, வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 9 முதல் 10 மணி வரையிலும் வைணவ முறைப்படி, பட்டாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓத, ராஜ கோபுரம், கோயில் விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பிறகு, காலை 10.30 மணிக்கு சர்வ தரிசனம், காலை 11 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கல்யாண மஹாத்ஸவம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழாக் குழுவினர் சார்பில் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.நித்யா, ஆய்வாளர் பி.இந்திரா, செயல் அலுவலர் ஜி.அமுதசுரபி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், தருமபுரி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்ட பக்தர்கள்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com