முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
ரூ. 4.10 கோடியில் வாணிபக் கழக கிடங்கு காணொலியில் முதல்வர் திறப்பு
By DIN | Published On : 28th February 2019 09:15 AM | Last Updated : 28th February 2019 09:15 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போசிநாயக்கன்அள்ளியில் ரூ. 4.10 கோடியில் கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
போசிநாயக்கன்அள்ளி கிராமத்தில் தேசிய ஊரக வேளாண்மை வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், நுகர்பொருள் வாணிபக் கழகம் வட்ட செயல்முறை கிடங்கு ரூ. 4.10 கோடி மதிப்பில் 6. 42 ஏக்கர் பரப்பளவில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கு கட்டப்பட்டது.
இக் கிடங்கை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதை வரவேற்று, அக் கிடங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டல மேலாளர் ஏ.அப்துல் முனீர் குத்துவிளக்கேற்றி, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தரக்கட்டுப்பாடு மேலாளர் டி.சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் பா.சிவக்குமார், துணை மண்டல மேலாளர் நீ.தணிகாசலம், கூட்டுறவு துணை பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கற்பகவடிவு, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.