முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் விளக்குகள் பொருத்தக் கோரிக்கை
By DIN | Published On : 28th February 2019 09:17 AM | Last Updated : 28th February 2019 09:17 AM | அ+அ அ- |

தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் விரிவாக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலையில் விளக்குகள் விரைந்து பொருத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி நகரிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையானது, புறவழிச் சாலையில் குண்டலப்பட்டியில் பிரிந்து ராமக்காள் ஏரி, நான்கு முனைச் சாலை சந்திப்பு, நெசவாளர் காலனி, பாரதிபுரம், இலக்கியம்பட்டி, ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதியமான்கோட்டை வழியாக நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டியில் மீண்டும் சேலம் தேசிய நெடுஞ்சாலையோடு இணைகிறது.
சுமார் 15 கி.மீ. தொலைவு உள்ள இச் சாலையில் இலக்கியம்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இப் பணிகளுக்காக சாலையின் நடுவே பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகளின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு மின் கம்பங்களும் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சாலை மிக அகலமாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. இப் பணிகள் முடிந்து மாதக் கணக்கில் நாள்கள் கழிந்தும், சாலையின் நடுவே அகற்றப்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்படவும் இல்லை, துண்டிக்கப்பட்ட மின் விளக்குகளுக்கான இணைப்பு மீண்டும் வழங்கப்படவும் இல்லை.
இதனால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மிகுந்த சிரமத்துடன் வாகன ஓட்டிகள் அந்தச் சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இச் சாலையில் விபத்து நிகழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்தும் நீண்ட நாள்களாக பொருத்தப்படாமல் உள்ள விளக்குகளைப் பொருத்தி மீண்டும் அதனை ஒளிரச் செய்வதற்கான பணியை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.