நகைக் கடையில் நூதன முறையில் 5 பவுன் நகை திருட்டு: பெண் கைது
By DIN | Published On : 04th January 2019 08:23 AM | Last Updated : 04th January 2019 08:23 AM | அ+அ அ- |

தருமபுரியில் நகைக் கடையில் நூதன முறையில் 5 பவுன் தங்க நகையை எடுத்துச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி நகர கடைவீதியில் உள்ள ஒரு நகைக் கடைக்கு, வியாழக்கிழமை இளம்பெண் ஒருவர் மூன்று சிறுமியருடன் வந்துள்ளார். அப்போது, அவர்கள் தங்களிடம் ஏழரை பவுன் பழைய தங்க நகை உள்ளதாகவும், இதற்கு பதில் புதிய நகை தரும்படி கடையில் உள்ளவர்களிடம் தெரிவித்தனராம்.
இதையடுத்து, கடை ஊழியர் 5 பவுன் தங்க நகையை அளித்துவிட்டு, அப்பெண் கொடுத்த பழைய நகையைப் பெற்று அதனுடைய தரம் மற்றும் முத்திரையை பரிசோதித்துக் கொண்டிருந்த போது, அப்பெண் மற்றும் சிறுமியர் மாயமானர்.
புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீஸார், நான்கு முனை சாலை அருகே நின்றிருந்த, அப்பெண் மற்றும் சிறுமியரிடம் விசாரித்ததில், அவர்கள் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், டபேதார் முத்துசாமி தெருவைச் சேர்ந்த செம்பருத்தி (20) மற்றும் அவருடன் வந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 3 சிறுமியர் என தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், செம்பருத்தியைக் கைது செய்து, அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேலும், மூன்று சிறுமியரையும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.