பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 07th January 2019 09:47 AM | Last Updated : 07th January 2019 09:47 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வழியாகச் செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச் சாலையானது ரூ.10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்தச் சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக தருமபுரி மாவட்டத்தில் 919.24 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
எட்டு வழி பசுமைச் சாலை அமைப்பதற்கான நிலம் சர்வே பணிகள், எல்லைக் கல்கள் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே முடிந்து விட்டன.
எட்டு வழிச் சாலையால் அதிக அளவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து, இந்த திட்டத்துக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அதிகாரப்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், எட்டு வழி பசுமைச் சாலை திட்ட எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார் தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராடத்தில், அதிகாரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, எருமியாம்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேசினார். தொடர்ந்து, எட்டுவழிச் சாலை திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.