சுடச்சுட

  

  தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: அமைச்சர் வி.சரோஜா

  By DIN  |   Published on : 12th January 2019 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளது என சமூக நலத் துறை அமைச்சர் மருத்துவர் வி.சரோஜா தெரிவித்தார்.
  தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, மொரப்பூர், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் சமூக நலத் துறை சார்பில், தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
  இவ்விழாவில், அமைச்சர்கள் வி.சரோஜா, கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்று 2,500 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தாலிக்குத் தங்கம், உதவித் தொகைகளை வழங்கினர்.
  விழாவில், சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா பேசியது: தமிழக அரசு செயல்படுத்தி வரும் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இதுவரை 5,040 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இதில் 4,010 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தின் மூலம் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்களில் பெறப்பட்ட குழந்தைகளை அரசு தத்து மையங்கள் வழியாக சரியான, தகுதியான பெற்றோர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விதிமுறைகளுக்குள்பட்டு தத்துகொடுக்கப்பட்டு வருகிறது.
  தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.141 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் இதுவரையில் 9 லட்சத்து 30 ஆயிரம் பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு முதல் 2018 வரை தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 10 லட்சத்து 53 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திலும், திருமண நிதியுதவித் திட்டத்திலும் சுமார் 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
  பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் இதை தெரிவித்துள்ளது. 
  தமிழகத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் குழுக்கள் நெகிழிப் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்களை சிறு மற்றும் குடிசைத் தொழில்களாக தொடங்க அரசு ரூ.1,200 கோடி
  ஒதுக்கியுள்ளது. 
  தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் 72 அங்கன்வாடி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
  விழாவில், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: 
  அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருள்கள் வழங்கப்படுகின்றன. 81 புதிய கல்லூரிகள், 1,585 புதிய பாடப் பிரிவுகள், புதிய பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடித்த பின், மாணவர்கள் 48.6 சதவீதத்தினரும், மாணவியர் 48.2 சதவீதத்தினரும் உயர்கல்வியில் சேருகின்றனர். இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.
  இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரகமதுல்லா கான், சார்-ஆட்சியர் ம.ப.சிவன் அருள், சமூக நல அலுவலர் கு.நாகலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai