நீரின்றி காய்ந்து சருகாகும் மஞ்சள், கரும்பு பயிர்கள்

தருமபுரி மாவட்டத்தில் பயிர் செய்த மஞ்சள், கரும்பு பயிர்கள் நீரின்றி காய்ந்து சருகாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பயிர் செய்த மஞ்சள், கரும்பு பயிர்கள் நீரின்றி காய்ந்து சருகாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, புலிகரை, பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, மாரண்டஹள்ளி, அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர்.  மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.  பெரும்பாலும் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  மழையை மட்டுமே பிரதான ஆதாரமாகக் கொண்டு ஆண்டுதோறும் விவசாயிகள் இத்தகைய பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,  நிகழாண்டு தருமபுரி மாவட்டத்தில் பொழிய வேண்டிய சராசரி மழையளவில் 813 மி.மீட்டரில் பாதிக்கும் குறைவாகவே பொழிந்தது.  அதாவது 283 மி.மீ. அளவு மட்டுமே மழையளவு பதிவாகியிருந்தது.  போதிய மழையின்மையால்,  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து ஏரிகள், கிணறு மற்றும் நீர்நிலைகள் வறண்டன. 
மழை பொழியும் என நம்பி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்கம்போல,  மஞ்சள் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.  ஆனால்,  பயிரிட்ட சில மாதங்களில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப்போயின.  தற்போது, பயிரிட்டுள்ள மஞ்சள் பயிர்கள் அனைத்தும் மார்ச் மாதம் அறுவடைக்கு வரும்,  அதை விற்று வருவாய் ஈட்டலாம் என எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு கிணற்றுப் பாசனமும் கைகொடுக்காததால் ஏமாற்றமடைந்தனர். இதனால், நீரின்றி நிலத்திலேயே இப் பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதேபோல,  கரும்புக்கு போதிய தண்ணீர் இல்லாததால் அரைவைக்கு கரும்பு வெட்டி ஆலைகளுக்கு அனுப்ப வேண்டிய தருணத்தில்,  கரும்பும் பெரும்பாலும் காய்ந்து போயுள்ளது.
இந்த நிலையில்,  அறுவடை வரை பயிர்களைக் காப்பாற்றி விடலாம் என எண்ணி ஒரு சில விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி இப் பயிர்களை வளர்த்து வருகின்றனர். எனினும்,  தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் இவையும் தொடருமா எனத் தெரியவில்லை என விவசாயிகள் கருதுகின்றனர்.
இதுகுறித்து புலிகரை அருகே மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயி கோபால் கூறியது:  என்னுடைய 6 ஏக்கர் நிலத்தில் மரவள்ளி, கரும்பு, மஞ்சள் பயிரிட்டுள்ளேன். கிணற்றுப் பாசனத்தை நம்பி பயிர் செய்து வரும் நிலையில்,  கடந்த ஒரு மாதமாக நீரின்றி கிணறு வற்றிப் போய்விட்டது. இதனால், சாகுபடி செய்த கரும்பு, மஞ்சளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவை காய்ந்து வருகின்றன.  தண்ணீர் தொடர்ந்து கிடைத்திருந்தால்,  ஒரு ஏக்கர் மஞ்சளுக்கு ரூ.2 லட்சம் வரை வருவாய் ஈட்டியிருப்பேன்.  ஆனால், தற்போது பயிர்கள் காய்ந்துவிட்டதால்,  சாகுபடிக்கு செய்த செலவுத் தொகை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். 
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியது:  தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை எதிர்பார்த்த அளவு கிடைக்கப் பெறவில்லை.  இதனால், கிணறுகள் நீரின்றி வறண்டு போயுள்ளன.  மேலும்,  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.  இதனால்,  பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையிலேயே கரும்பு அரைவைக்கு தண்ணீர் போதிய அளவு கிடைக்கப்பெறாமல்,  தற்போது விலைக்கு வாங்கி அரைவை செய்யப்படுகிறது.  இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில்,  மாவட்டத்தில் காய்ந்துபோன பயிர்களைக் கணக்கெடுத்து,  உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com