ரூ.2.95 கோடியில் மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணை புனரமைப்புப் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே ரூ.2.95 கோடியில் மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணை புனரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே ரூ.2.95 கோடியில் மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணை புனரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நல்லம்பள்ளியை அடுத்த பாளையம்புதூர் அருகே தொப்பூர் வனப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணை. கடந்த 1963-இல் கட்டப்பட்ட இந்த தடுப்பணை உடைந்து சேதமடைந்துள்ளதால், மழைக் காலங்களில் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனது. இந்த நிலையில், இந்த தடுப்பணையை புனரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இவர்களின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, தடுப்பணையை புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து, மாரியம்மன் கோயில் பள்ளத்தில் இதற்கான விழா ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. விழாவில், மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்து பேசியது: இந்த அணைக்கட்டிலிருந்து 3.65 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் மூலம் திம்மலகுந்தி ஏரி, நாயக்கன் ஏரி, புதுஏரி, பக்கிரி ஏரி, சின்ன பெரமன் ஏரி மற்றும் ஏலகிரி பெரிய ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம், சுமார் 388 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இப் பணிகள் விரைந்து நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும் என்றார். 
19 புதிய பேருந்துகளின் போக்குவரத்து தொடக்கம்: தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்துக்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் போக்குவரத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, பொம்மிடி, அரூர், ஒசூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பணிமனைகளிலிருந்து இப்பேருந்துகள், சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com