சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி சாலை மறியல்

சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஜருகு மற்றும் அப்பனஅள்ளி கோம்பையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஜருகு மற்றும் அப்பனஅள்ளி கோம்பையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சிக்குள்பட்டது அப்பனஅள்ளி கோம்பை கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப் பகுதிக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மூன்று நாள்களுக்கு ஒரு முறை ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லையாம்.
மேலும், அப் பகுதிக்கு வரும் ஒகேனக்கல் குடிநீர் குழாயிலிருந்து முறைகேடாக தனிநபர்கள் தண்ணீர் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அப் பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலிகுடங்களுடன், மிட்டாரெட்டிஅள்ளி-தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
இதில், முறையாக குடிநீர் வழங்கவும், முறைகேடாக தண்ணீர் எடுப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல, நல்லம்பள்ளி அருகே ஜருகு காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஜருகு-தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த, தொப்பூர் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால், சுமார் அரை மணி நேரம் அப்பகுதி போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com