மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம்
By DIN | Published On : 24th January 2019 02:36 AM | Last Updated : 24th January 2019 02:36 AM | அ+அ அ- |

மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அரூரில் காங்கிரஸ் கட்சியினர் வீடு, வீடாகச் சென்று புதன்கிழமை வழங்கினர்.
2019 மக்களவைத் தேர்தல் பிரசார பணிகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்தும் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்கும் பிரசார திட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அரூரில் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தொடக்கி வைத்தார்.
கருப்பு பணத்தை மீட்பதாக பா.ஜ.க. சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை ஏமாற்றும் பெரிய மோசடியாகும். ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல்கள் அதிகரித்துள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை காங்கிரஸ் கட்சியினர் அரூர் நகரில், நான்கு வழிச் சாலை, பாட்சாபேட்டை, திரு.வி.க நகர் உள்ளிட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கினர்.
இதில், கட்சியின் வட்டாரத் தலைவர்கள் ஆர்.சுபாஷ், எம்.ஆர்.வஜ்ஜிரம், பொன்.பிரகாசம், பூபதி ராஜா, நகரத் தலைவர் கே.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.