ஜூலை 8-இல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 05th July 2019 07:58 AM | Last Updated : 05th July 2019 07:58 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூலை 8-இல் தொடங்குகிறது.
தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2019-20 கல்வியாண்டுக்கான பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து ஆசிரியர்களும் மாறுதல் விண்ணப்ப நகலுடன், அந்தந்த நாள்களில் மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
இதேபோல, தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல், பதவி உயர்வு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல், பொது மாறுதல் கலந்தாய்வு வரும், 8-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக் கலந்தாய்வு, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்கென விண்ணப்பித்துள்ளவர்கள் அந்தந்த நாள்களில் பங்கேற்கலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.