ஆந்திர செம்மரக் கடத்தல் சம்பவம்: நீதிமன்றத்தில் ஆஜராகதமிழக தொழிலாளர்களுக்கு சம்மன்

ஆந்திர செம்மரக் கடத்தல் வழக்கில் ஜாமீனில் இருப்பவர்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்

ஆந்திர செம்மரக் கடத்தல் வழக்கில் ஜாமீனில் இருப்பவர்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை சம்மன் வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக , தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கடந்த 2015-இல் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சியைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தமிழக தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.  தொடர்ந்து, சிறையில் இருந்த தமிழக தொழிலாளர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில், செம்மரக் கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கு விசாரணையில் தமிழக தொழிலாளர்கள் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து,  ஜாமீனில் இருப்பவர்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி, ஆந்திர மாநில வனத் துறையினர் தமிழக போலீஸாருடன் இணைந்து, சித்தேரி, கலசப்பாடி, அரசநத்தம், கோட்டப்பட்டி, வாச்சாத்தி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினத் தொழிலாளர்களிடம் சம்மன்களை வழங்கினர்.
சம்மன்களைப் பெற்றுள்ள தமிழக தொழிலாளர்கள் ஆந்திர மாநிலம், நெல்லூர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டும் என ஆந்திர மாநில வனத் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com