தென்னை மரங்களுக்கு வேர்ப் பகுதியில் பாசனம் செய்யும் முறை தொடக்கி வைப்பு

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் தென்னை மரங்களுக்கு வேர்ப் பகுதியில் பாசனம் செய்யும் முறையை

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் தென்னை மரங்களுக்கு வேர்ப் பகுதியில் பாசனம் செய்யும் முறையை வெள்ளிக்கிழமை ஆட்சியர் சு.மலர்விழி பார்வையிட்டு தொடக்கி வைத்தார்.
தருமபுரி அருகே அதியமான்கோட்டை கிராமத்தில் கோவிந்தராஜ் என்ற விவசாயியின் வயலில் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற தென்னையில் நேரடியாக வேருக்கு பாசனத்துடன் நுண்ணூட்டமிடும் முறையினை ஆட்சியர் சு.மலர்விழி தொடக்கி வைத்து பேசியது:
வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தென்னை மற்றும் இதர பழ மரங்கள் காய்ந்துபோவதை தடுத்து புத்துயிரூட்ட, நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் நேரடியாக வேருக்கு பாசனத்துடன் நுண்ணூட்டமிடலாம். இதன் மூலம் தென்னை மரங்களை பாதுகாக்கலாம்.
நிலத்தில் இரண்டு அடி ஆழம் என்ற அளவில் தென்னை மரத்தைச் சுற்றி 4 இடங்களில் குழி எடுக்க வேண்டும். சிறிய மரத்துக்கு இரண்டு அடி இடைவெளியிலும், பெரிய மரத்துக்கு 4 அடி இடைவெளியிலும் குழிகள் அமைக்கப்பட வேண்டும். குழி தோண்டும் கருவி அல்லது கடப்பாரை மூலம் ஓர் அடி விட்டம் என்ற அளவில் தென்னை மரத்தைச் சுற்றி 4 இடங்களில் துளை போல குழி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த மையத் துளையில் தலா 2 கைப்பிடி அளவு சளித்த மண்புழு உரம் அல்லது எரு இட்டு ஆற்று மணல் 4 கைப்பிடி அளவு கொண்டு நிரப்ப வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும் போதும் நான்கு மூளைகளிலும் உள்ள உரக்கலவை வழியாக தண்ணீர் எளிதாக ஊடுருவிச் சென்று வேரின் அருகே உள்ள மண்ணில் நீர் பிடிப்புத் தன்மை அதிகரித்து பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்து கிடைக்கும். இத்தொழில்நுட்பம் வளர்ந்த மரங்களுக்கு மட்டுமல்லாமல் புதிய கன்றுகளுக்கும் பயன்படுத்தலாம்
என்றார்.
இதில், வேளாண் இணை இயக்குநர் இரா.கைலாசபதி, வேளாண் உதவி இயக்குநர் இரா.தேன்மொழி, வேளாண் அலுவலர்கள் இளங்கோவன், அதிபதி, அலுவலர்கள், களப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com