பாலியல் தொந்தரவுகளைமருத்துவர்கள் குற்றமாகப் பார்க்க வேண்டும்

பாலியல் தொந்தரவுகளை நோயாக பார்க்காமல் அதை குற்றமாக பார்க்க வேண்டும் என மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ அறிவுறுத்தினார்.


பாலியல் தொந்தரவுகளை நோயாக பார்க்காமல் அதை குற்றமாக பார்க்க வேண்டும் என மருத்துவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ அறிவுறுத்தினார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் எட்வின் ஜோ தொடக்கிவைத்து பேசியது: மருத்துவர்கள் பாலியல் தொந்தரவுகளை நோயாக பார்க்காமல் குற்றமாக பார்க்க வேண்டும். நோயாகக் கருதி, காவல் துறையினர் மருத்துவர்களின் அறிக்கையை எதிர்பார்க்கக் கூடாது. டைபாய்டு, மலேரியா என மருத்துவ ஆய்வறிக்கை வழங்குவது போல, இதற்கும் வழங்க முடியாது. பாலியல் கொடுமைகள் இந்திய தண்டனை சட்டத்தில் குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பாலியல் பாதிப்புகள் ஒரு குற்ற நிகழ்வாகும்.
போக்ஸோ சட்டத்தில் மருத்துவர்கள் தங்கள் வரன்முறைகள் மற்றும் அந்த நிகழ்வு தொடர்பாக எவ்வாறு சான்றுகள் அளிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.பாலியல் வன்கொடுமைகளில் சிறிய காயங்கள் இருந்தாலும், அவற்றை அலட்சியமாகக் கருதாமல், அது மனதளவில் அவர்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் மருத்துவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற நிலைகளில் மனநல மருத்துவர்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
18 வயதுக்குள்பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்தான் போக்ஸோ சட்டம்.
குழந்தைகளுக்கு சிறுவயதில் நிகழ்ந்த பாதிப்புகள், அவர்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அவர்களுக்கு அந்த பாதிப்பு வெளிப்படும் என்பதையும் மருத்துவர்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம் நல்ல முறையில் வளர வேண்டும் எனில் சிறுவர்களை இந்த மன பாதிப்பில் இருந்து பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என்றார்.
இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் வகித்தவர்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. ராஜன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com