பகுதி நேர நியாய விலைக் கடை திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 24th July 2019 09:42 AM | Last Updated : 24th July 2019 09:42 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த பாப்பநாய்க்கன்வலசை கிராமத்தில் புதிதாக பகுதி நேர நியாய விலைக் கடையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், வீரப்பநாய்க்கன்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பநாய்க்கன்வலசை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அதேபோல், அங்குள்ள விவசாய நிலங்களில் 100 - க்கும் மேற்பட்டோர் வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் விலையில்லா அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருள்களை பெறுவதற்காக, பாப்பநாய்க்கன்வலசை கிராம மக்கள், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூருக்குச் சென்று பொருள்களை பெற்று வருகின்றனர்.
இதனால் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று ரேஷன் பொருள்களை பெறும் நிலையுள்ளது. எனவே, கூடலூர் நியாய விலைக் கடையைப் பிரித்து, பாப்பநாய்க்கன் வலசை கிராமத்தில் புதிதாக பகுதி நேர நியாய விலைக் கடையைத் திறக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு.