முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
ஏரியூர் அருகே தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார்
By DIN | Published On : 30th July 2019 09:27 AM | Last Updated : 30th July 2019 09:27 AM | அ+அ அ- |

ஏரியூரை அடுத்த புதுநாகமரை சாலையில் இருந்து முனியப்பன் கோயில் வரை புதிதாக அமைக்கப்படும் சாலை, தரமற்ற நிலையில் இருப்பதாக புகார் கூறிய பொதுமக்கள், சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
பென்னாகரம் அருகே ஏரியூரை அடுத்த புதுநாகமரை பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏரியூர் பகுதியானது மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால், பல்வேறு கிராமங்களுக்கு முறையான சாலை வசதியில்லை. இந்த நிலையில் ராமகொண்ட அள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு உள்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் 2018 - 2019 ஆம் நிதியாண்டில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் புதுநாகமரைப் பகுதியில் இருந்து முனியப்பன் கோயில் வரை 2 கி.மீ. தொலைவுக்கு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக கடந்த இரண்டு மாதங்களாக ஜல்லிக் கற்கள் பதிக்கப்பட்டு, வரும் நிலையில் தற்போது தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த புதிய தார்ச்சாலையானது தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார் கூறிய அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: புதுநாகமரை பகுதியில் இருந்து முனியப்பன் கோயில் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் புதிய தார்ச்சாலைக்கு ஜல்லிக்கற்களை இயந்திரம் மூலம் பதிக்காமலும், முறையாக தார் ஊற்றாமலும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைப் பணியானது சுமார் 500 மீட்டர் வரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் சாலையை குழந்தைகள் கையினால் பெயர்க்கும் அளவிற்கு தரமற்ற முறையில் உள்ளது. எனவே, புதிய தார்ச் சாலையை தரமான முறையில் அமைக்க வேண்டும். மேலும், இந்த சாலைப் பணி குறித்து ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.