முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
சங்க காலத்திற்கு முன்பே மழைநீர் சேகரிக்கும் மரபு இருந்துள்ளது: தொல்லியல் அறிஞர் பூங்குன்றன்
By DIN | Published On : 30th July 2019 09:24 AM | Last Updated : 30th July 2019 09:24 AM | அ+அ அ- |

சங்க காலத்திற்கு முன்பே மழைநீர் சேகரிக்கும் மரபு இருந்துள்ளது என்றார், தொல்லியல் அறிஞர் பூங்குன்றன்.
தருமபுரி புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் வெ.ராஜன் தலைமை வகித்தார். இதில், தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் பேசியது: சங்க காலத்துக்கு முன்பிருந்தே மழைநீரைச் சேகரிக்கும் மரபு இருந்து வந்துள்ளது. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் இதனை காணலாம். அசுரர்கள் தேக்கிவைத்த நீரை இந்திரன் உடைத்தான் என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முந்தைய நீர் இறைக்கும் சால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகம் என்பது அடிப்படையில் வேளாண் நாகரிகமாகும். நீர் சேகரிப்புப் பற்றிய அறிவு சங்க காலத்தில் இருந்தது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஆயிரக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டிருந்தன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாண்டிய மன்னன் வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டினான். மகேந்திரவர்மன் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 60 ஏரிகள் வெட்டப்பட்டுள்ளன. பேரூரில் உள்ள கல்வெட்டு ஒன்றில் நீரைச் சேமிப்பதற்காக அணை கட்ட மன்னரிடம் மக்கள் கோரிக்கை விடுத்த செய்தி காணப்படுகிறது. மேலைநாடுகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. எதிர்காலத்தில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என தந்தை பெரியார் வெகு காலத்துக்கு முன்பே எச்சரித்துள்ளார். நீரின் அவசியத்தைக் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். பள்ளிப்பாடத்தில் நீர் சேகரிப்பு குறித்து சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
இக் கருத்தரங்கில் தொல்லியல் துறை இணை இயக்குநர் தி.சுப்ரமணியன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை, காவிரி ஆகிய இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் இவை பாசனத்துக்கு பயன்படுவதில்லை. ஆற்றங்கரையிலேயே கோயில்களும் குடியிருப்புகளும் உருவாகி இருக்கின்றன. தற்போது, நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சரிபாதி ஏரிகள் தற்போது இல்லை. தருமபுரி மாவட்டம், பெரும்பாலும் கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ளது. பெருமளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழாகச் சென்று விட்டது. இதனால் பயிர் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தைச் சார்ந்து இருந்த ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அண்டை மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்த நிலை ஏற்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தின் வறட்சியைப் போக்க மழைநீரைச் சேகரிக்க தீவிரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். இக் கருத்தங்கில் அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையத்தினர் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற கூட்டத்தில், "பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம்' என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரையாற்றினார்.