தருமபுரி: தருமபுரி ஒளவையார் அரசு மகளிர் பள்ளியில் மாணவியரின் பாதுகாப்பு கருதி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தருமபுரி நகரில் திருப்பத்தூர் சாலையில் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பள்ளி, தருமபுரி நகரில் தொடக்கக் காலத்தில் தொடங்கப்பட்ட மிக தொன்மையான பள்ளியாகும். இங்கு தற்போது 3,550 மாணவியர் பயின்று வருகின்றனர். அதேபோல, இப்பள்ளியில், தலைமை ஆசிரியை தெரசாள் உள்பட 118 ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகரில் உள்ள பள்ளிகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மாணவியர் பயின்று வரும் இப்பள்ளியில், மாணவியரின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் பள்ளி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புகார் பெட்டி: இப்பள்ளியில் கடந்த ஆண்டு நகர போலீஸார் சார்பில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவுகள், பாலியல் சீண்டல்கள் குறித்து தகவல் தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டது.
இப்புகார் பெட்டியில் பெறப்படும் மனுக்களில் உள்ள பெயர்கள் மற்றும் விவரங்கள் ஆகியவற்றின் ரகசியம் காக்கப்படும் எனவும், அதே நேரத்தில் அப்புகார்கள் குறித்து உண்மைத்தன்மை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பெட்டியில் சில புகார் மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன.
சிசிடிவி கேமரா: இதன் தொடர்ச்சியாக தற்போது, இப்பள்ளியில் பயிலும் மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி நிர்வாகம் சார்பில், சிசிடிவி கேமரா
நான்கு இடங்களில்
பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், வெளி நபர்கள் நடமாட்டம் ஏதும் பள்ளி வளாகத்தில் இருக்கிறதா எனவும், தேவையற்ற ஆள்களின் வருகையைத் தவிர்க்கவும், இன்ன பிற நடவடிக்கைகளையும் கண்காணித்து, மாணவியருக்கு தேவையான பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க இயலும் என பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் வேறெங்கும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சிறந்த முன் உதாரணமாக தருமபுரி ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியரின் பாதுகாப்புக்காக சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.