போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி அரசுப் பள்ளி மாணவியர் மறியல்

பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை மாணவியர் மறியலில் ஈடுபட்டனர் .

பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை மாணவியர் மறியலில் ஈடுபட்டனர் .
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ளது பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. சுமார் 700 மாணவியர் பயின்று வருகின்றனர். இப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, மாற்றுப் பணியாக, பெரியாம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள் இப் பள்ளியில் பாடம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில்,  நிகழ் கல்வியாண்டில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.  ஆனால், இதுவரை மேல்நிலை வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.  அதேபோல, மாற்றுப் பணி ஆசிரியர்களாகவும் யாரும் நியமிக்கப்படவில்லை.  இது குறித்து, மாணவியரின் பெற்றோர், அண்மையில் கல்வித் துறையினரிடம் முறையிட்டனர்.  எனினும், ஆசிரியர்கள் பணியிடம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. 
இதனைத் தொடர்ந்து,  இப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவியர் செவ்வாய்க்கிழமை பெரியாம்பட்டி-தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதில், போதிய ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து, தகவல் அறிந்து அங்கு வந்த காரிமங்கலம் வட்டாட்சியர் கேசவமூர்த்தி, போலீஸார் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், போதிய ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, சமாதானம் அடைந்த மாணவியர் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.  இப் போராட்டத்தால் தருமபுரி-பெரியாம்பட்டி சாலையில் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com