தீர்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க பாமக வலியுறுத்தல்
By DIN | Published On : 24th June 2019 10:16 AM | Last Updated : 24th June 2019 10:16 AM | அ+அ அ- |

தீர்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரூரை அடுத்த தீர்த்தமலையில் பாமக ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் ஏ.வி.இமயவர்மன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தீர்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். எனவே, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் வகையில், தீர்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க வேண்டும்.
கோட்டப்பட்டி அருகேயுள்ள நாகமரத்துப்பள்ளம் தடுப்பு அணையில் இருந்து தாமரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரூர்-கோட்டப்பட்டி வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்து தடம் எண்- 24-ஐ இரவு 9.45 மணியளவில் நரிப்பள்ளி வழியாக சென்றுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்த்தமலையில் அமைந்துள்ள வன்னியர் மடத்தில் புதியதாக கட்டடம் கட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம், 14.7.2019-ல் தீர்த்தமலையில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக மாநில துணைத் தலைவர் ரா.அரசாங்கம், உழவர் பேரியக்க மாவட்டத் தலைவர் அய்யப்பன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் க.வேலு, ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், திருமால் செல்வன், குமரேசன், சேகர், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.