சுடச்சுட

  

  இளைஞரைக்  கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை  விதித்து,  தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  தருமபுரி  மாவட்டம்,  காரிமங்கலம் கேசப்ப நாயுடு கொட்டாயைச் சேர்ந்தவர் பூவரசன் (25).  இவருக்கும்,  காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிலால் (37) என்பவரின் தங்கைக்கும் பழக்கம் இருந்துள்ளது.  இதையடுத்து, தனது தங்கையுடனான பழக்கத்தை துண்டித்துக் கொள்ளுமாறு பிலால், பூவரசனிடம்  கூறியுள்ளார்.  இருப்பினும்,  அவர்களுக்குள் பழக்கம் தொடர்ந்துள்ளது.
  இந்த நிலையில்,  2017 ஏப்.  1- இல்,  பிலால், அவரது நண்பர் சேலம், பொன்னாமாபேட்டை  மஜீத் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (எ) அர்த்தநாரி (44) ஆகிய இருவரும் சேர்ந்து,  பூவரசனுக்கு  உணவில் சையனைடு விஷம் கலந்து கொடுத்து,  கொலை செய்துள்ளனர்.
  இது குறித்த  புகாரின் பேரில்,  காரிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,  பிலால் மற்றும்  அர்த்தநாரியைக் கைது செய்தனர்.  இந்த வழக்கின் மீதான விசாரணை, தருமபுரி கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த நிலையில்,  புதன்கிழமை இவ் வழக்கு விசாரணை முடிவில்,  நீதிபதி எம்.ஜீவானந்தம்,  பூவரசனைக் கொலை செய்த குற்றத்துக்காக, பிலால் மற்றும் அர்த்தநாரிக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.   மேலும்,  அபராதத் தொகையைச்  செலுத்தத் தவறினால்,  கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai