தடுப்பணை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 04th March 2019 08:28 AM | Last Updated : 04th March 2019 08:28 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த கட்டரசம்பட்டியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் வட்டம், தீர்த்தமலை ஊராட்சிக்கு உள்பட்டது கட்டரசம்பட்டி கிராமம். இந்த ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கட்டரசம்பட்டி கிராமம் அருகே வரட்டாறு செல்கிறது.
தொடர் மழைக் காலங்களில் மாம்பாடி வனப் பகுதியில் இருந்த வரும் வெள்ளமானது வரட்டாற்றின் வழியாகச் செல்கிறது. போதிய தடுப்பணை இல்லாததால், இந்த ஆற்றில் ஓடும் மழை நீரானது வீணாகி தென்பெண்ணை ஆற்றில் சேருகிறது.
வரட்டாறு செல்லும் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. கட்டரசம்பட்டி வரட்டாற்றில் தடுப்பணைகள் அமைந்தால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே, கட்டரசம்பட்டி பகுதியில் வரட்டாற்றில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.