வறண்ட கிணறுகளை ஆழப்படுத்தும் விவசாயிகள்

நீரின்றி வறண்ட கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

நீரின்றி வறண்ட கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 
தருமபுரி மாவட்டத்தில் 74 பொதுப்பணித் துறை ஏரிகளும், 8 அணைகளும் உள்ளன. இவை தவிர, ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த நீர்நிலைகளின் பாசனப் பகுதிகள் தவிர, ஏனைய நிலங்கள் யாவும், வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. அதாவது பருவ மழையை நம்பியும், சில நூறு எண்ணிக்கையிலான விவசாயிகள் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். வற்றாத ஜீவநதிகளாக காவிரியும், தென்பெண்ணையும் இம் மாவட்டம் வழியாக கடந்து சென்றாலும், இந்த நதிகளின் நீர், இம்மாவட்ட விவசாயிகளுக்கு பயன்பட்டதில்லை.

வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
மாவட்ட விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க, தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்து, கருகிய பயிர்களைக் கணக்கெடுத்து நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட வேண்டும். அதேபோல, தற்போது கோடையில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு போயுள்ள அவகாசத்தை பயன்படுத்தி, நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி, நீர்நிலைகளை ஆழப்படுத்தி இனிவரும் காலத்தில் பொழியும் மழை நீரை, முற்றிலும் சேமித்து பாசனத்துக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்
தெரிவிக்கின்றனர்.

பொய்த்துப்போன பருவ மழை
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. குறிப்பாக கடந்தாண்டு பொழிய வேண்டிய மழையளவில் 25 சதவீதம் கூட பொழியவில்லை. 
இதனால், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் பெரும்பாலும் வற்றிப்போயின. இதனால், கிணற்றுப் பாசனத்தை நம்பி வைத்த பயிர்கள் நீரின்றி கருகத் தொடங்கின. பயிர்கள் வாடுவதைக் கண்ட விவசாயிகள் சிலர், அதனை அறுவடை நிலைக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் லாரிகள், டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சினர்.

கிணற்றை ஆழப்படுத்தும் விவசாயிகள்
தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் நீரின்றி வறண்டுபோன கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், இயந்திரத்தின் மூலமும், ஆள்களைக் கொண்டும் தங்களது விவசாயக் கிணறுகளை சுமார் 20 அடி முதல் 40 அடி வரை ஆழப்படுத்தி வருகின்றனர். மேலும், சில விவசாயிகள், தங்களது நிலத்தில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப்போனதால், புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார வசதியில்லா விவசாயிகள் கருகிய பயிர்களைக் கண்டு பரிதவிக்கின்றனர்.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com