சுடச்சுட

  

  தண்ணீர் தட்டுப்பாடு: தருமபுரி மாவட்டம் முழுவதும் தவிப்பு!

  By DIN  |   Published on : 17th March 2019 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தருமபுரி மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
  தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள், கிணறுகள், நீர்நிலைகள் நீரின்றி வறண்டுபோனது. 
  தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 813 மி.மீட்டர். ஆனால், கடந்தாண்டு 249.6 மி.மீட்டர் மட்டுமே பொழிந்தது. இதனால், நீர்நிலைகளில் துளியளவு நீரின்றி வறண்டன. இந்த நிலையில், பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1000 அடிக்கும் கீழே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  இதன் காரணமாக, பொதுமக்கள் தங்களது வீடுகளில் அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீரின்றி, தவித்து வருகின்றனர். இதனால், பொதுப்பயன்பாட்டில் உள்ள கிராம ஊராட்சி குடிநீர்த் தொட்டிகளை மட்டுமே நம்பி தண்ணீர் விநியோகத்திற்காக காத்திருக்கும் நிலை பரவலாக ஏற்பட்டுள்ளது. 
  இதில், தருமபுரி அருகேயுள்ள தடங்கம், ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, நேருநகர், செந்தில்நகர், ராயல் நகர், டாடா நகர், இலக்கியம்பட்டி என பல்வேறு பகுதி மக்கள் குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகத்தின் நீர்த்தேக்கத் தொட்டியில் காத்திருந்து பிடித்தாலும் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால், நடுத்தர குடும்பத்தினர் விலை கொடுத்து டிராக்டர் மற்றும் லாரிகளில் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விலை கொடுத்து வாங்கி இயலாதவர்கள் தங்களது காலிங்குடங்களை குழாய் அருகில் வைத்து
  காத்துக்கிடக்கின்றனர். 
  மேலும், கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் பெரும்பாலை, பாலக்கோடு, தருமபுரி நகரப் பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி நகரின் பிரதான குடிநீர் விநியோகமாக இருந்த பஞ்சப்பள்ளி அணை நீரின்றி வறண்டு போனதால், பஞ்சப்பள்ளி அள்ளி தண்ணீரும் தருமபுரி நகர மக்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது. 
  தற்போதைக்கு தருமபுரி மாவட்ட மக்களுக்கு நிலத்தடி நீரும், ஆழ்துளைக் கிணறுகளும் கைவிட்ட நிலையில், ஒகேனக்கல் குடிநீர் மட்டுமே நம்பியுள்ளனர். இதுவும் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
  எனவே, மாவட்ட மக்களின் பரிதவிப்பை போக்கவும், குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்னையை எதிர்காலத்தில் களையவும், தருமபுரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளை தூர்வாரி, மழைக்காலத்தில் நீரை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கோடையிலேயே தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  இதேபோல, மழைக்காலம் தொடங்கும் வரை தற்காலிகமாக, ஒகேனக்கல் குடிநீரை கூடுதலாகவும், நாள்தோறும் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai