தி.மு.க. வேட்பாளர்கள் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் அரூர்,  பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகள்

தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் அரூர்,  பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் திங்கள்கிழமை பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக டி.என்.வி. செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார். அதேபோல, அரூர்  (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு  கிருஷ்ணகுமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஆ.மணி ஆகியோர் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று வேட்பாளர்களும்,  தருமபுரியில் திருப்பத்தூர் சாலையில் உள்ள பெரியார் சிலை மற்றும் நான்குமுனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், அக் கட்சியின் மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
 இதில், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன்,  காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ந.நஞ்சப்பன், மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் த.ஜெயந்தி, ம.தி.மு.க. மாவட்டச் செயலர் தங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
ஒசூரில்...
ஒசூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என தளி எம்.எல்.ஏ. வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான் ஒய்.பிரகாஷ் தெரிவித்தார். 
ஒசூர் வந்த திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யாவுக்கு பத்தளப்பள்ளி அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பேரணியாக ராயக்கோட்டை சந்திப்பு, காமராஜ் காலனி, வட்டாட்சியர் அலுவலக சாலை வழியாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதில் தளி எம்.எல்.ஏ.  ஒய்.பிரகாஷ், வேப்பனஅள்ளி எம்.எல்.ஏ. முருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
இதையடுத்து  தொண்டர்கள் மத்தியில் ஒய்.பிரகாஷ் பேசியது:  ஒசூர் தொகுதியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி பெற்றுள்ளோம். எனவே தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.சத்யாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
 தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா பேசியது: ஒசூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்த தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், வேப்பன அள்ளி எம்.எல்.ஏ. பி.முருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன். 
முதல் முறையாக ஒசூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்  வெற்றி பெற  அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றார். 
இதில் மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி ஞானசேகரன், மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமார், சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com