கடத்தூர் ஒன்றிய அலுவலகப் பணிகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும்: மக்கள் எதிர்பார்ப்பு

புதியதாக அறிவிக்கப்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலகப் பணிகளைச் செயல்பாட்டுக்குக்

புதியதாக அறிவிக்கப்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலகப் பணிகளைச் செயல்பாட்டுக்குக்  கொண்டுவர வேண்டும் என்பதே பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி  மக்களின் எதிர்பார்ப்பு.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சிகள் உள்ளன.  இந்த ஊராட்சியானது எண்ணிக்கை மற்றும் பரப்பளவில் பெரியதாகும்.  இதையடுத்து, நிர்வாக வசதிக்காக மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு,  புதியதாக கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,  கடத்தூரைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பசுவாபுரம்,  புட்டிரெட்டிப்பட்டி, சிந்தல்பாடி, கோபிசெட்டிப்பாளையம்,  குருபரஹள்ளி,  ஒசஹள்ளி, கர்த்தானூர்,  கேத்துரெட்டிப்பட்டி,  லிங்கநாய்க்கன்ஹள்ளி,  புளியம்பட்டி, ராமியனஹள்ளி, ரேகடஹள்ளி, சில்லாரஹள்ளி, சுங்கரஹள்ளி, சந்தப்பட்டி, தாளநத்தம், தாதனூர், தென்கரைக்கோட்டை, வகுத்துப்பட்டி, வெங்கடதாரஹள்ளி, மணியம்பாடி, மோட்டாங்குறிச்சி, மடதஹள்ளி, நல்லகுட்லஹள்ளி, ஒபிலிநாய்க்கன்ஹள்ளி ஆகிய 25 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. 
மேலும்,  கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பதவி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஆனால்,  புதியதாக கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும்,  அரசின் உத்தரவு இன்னும் அமலுக்கு வரவில்லை.
இதனால், கடத்தூர் பகுதியிலுள்ள கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொது மக்கள் குடிநீர், தெருவிளக்கு,  சாலை வசதிகள்,  பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள்,  திருமண உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்காக நீண்ட தொலைவில் உள்ள மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து செல்லும் நிலையுள்ளது. 
புதிய வேலைவாய்ப்புகள் : கடத்தூரில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்தால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  அலுவலகப் பணியாளர்கள், உதவியாளர்கள், இரவு காவலர்கள், ஓட்டுநர்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும்.  இதனால், 
ஊராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வுகளும்,  புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் நிலையுள்ளது.
எனவே,  புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பணிகளை விரைந்து தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com