தருமபுரி, கிருஷ்ணகிரியில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு

திருவிழாக்களையும் கண்காணித்து அவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.

திருவிழாக்களையும் கண்காணித்து அவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், தேர்தல் அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சு. மலர்விழி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் நினாவி மற்றும் உமேஷ் பதக் ஆகியோர்ஆலோசனைகளை
வழங்கினார்.
இக் கூட்டத்தில், தேர்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்கள், கோயில் திருவிழாக்கள், அனைத்து மத திருவிழா, வங்கியில் பெருந்தொகை பரிமாற்றம் நிகழ்வு, சுய உதவிக்குழுக்கள் என அனைத்து பண பரிமாற்றங்களையும் கண்காணித்து அவற்றை வீடியோ பதிவு செய்ய வேண்டும். அதேபோல, மதுக்கடைகளில் நாள்தோறும் நடைபெறும் விற்பனை அளவிலிருந்து 30 சதத்திற்கு கூடுதலாக விற்பனை நடைபெற்றால், அவற்றை கண்காணிக்க வேண்டும். விழாக்கள் பெயரில் பரிசு பொருள்கள் ஏதேனும் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறதா? எனக் கண்காணிக்க வேண்டும்.
வேட்பாளர்களின் செலவு வரம்பு குறித்தும், எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை? என்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அனைத்துச் செலவினங்களையும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரகமதுல்லா கான், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ம. காளிதாசன், அரசு அலுவலர்கள், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளரும், இணை ஆணையருமான (சுங்கம்) அனிஷ் பி. ராஜன் தலைமையில் பறக்கும் படை, நிலையானக் கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகிய குழுத் தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர் அனிஷ் பி. ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் டாக்டர் எஸ். பிரபாகர்  முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் பேசியது: தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்ட குழுக்கள் ஆய்வு பணியின்போது ஒரே இடத்தில் ஆய்வு மேற்கொள்ளாமல் சம்மந்தப்பட்ட தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தங்களது ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், சட்டத்துக்குப் புறம்பாக உரிய ஆவணமின்றி பணம் எடுத்து செல்வதும், மதுபானங்கள் விநியோகிப்பதும், இதரப்பரிசு பொருள்கள் வழங்குவது குறித்து தகவல் பெறப்பட்டால் இக்குழுவினர் சம்மந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வீடியோ பதிவு செய்யவேண்டும்.
மேலும் வாகனம் சோதனையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட குழுவினர் உரிய விவரம் தெரிவித்து சோதனை மேற்கொள்ள வேண்டிய வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
 கட்சி தொடர்பான கூட்டங்களில் பயன்படுத்தப்பட்ட சுவர் விளம்பரம் , பேனர், போஸ்டர், துண்டு பிரசுரங்கள், பந்தல், மைக் செட் , விளக்குகள், துணி மற்றும் கொடி வகைகள், வாகனங்கள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் பேசக்கூடியதை முழுமையாக வீடியோ பதிவு செய்தும், இதர பொருள்கள் குறித்து கணக்கிட ஏதுவாக முறையான வீடியோ பதிவு செய்து அதன் முழு விவரத்தை அறிக்கையாக தர வேண்டும் என தேர்தல் செலவினப் பார்வையாளர் அனிஷ் பி. ராஜன் ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com