ஊத்தங்கரை அருகே ஊர்த் திருவிழாவில் மோதல்: ஒருவர் பலி: 3 பேர் கைது

ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெளடி உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 


ஊத்தங்கரை அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெளடி உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
இது குறித்த விவரம்: கிருஷ்ணகிரி மாவட்டம்,   ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் வியாழக்கிழமை இரவு தேர் திருவிழா நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து,  வெள்ளிக்கிழமை ஊரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளரான ஜிம் மோகன் என்பவர்  அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனியமுதன்,  தொண்டரணி சரவணன்,  முனிராவ்,  ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நிர்வாகிகளை அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்து மரியாதை செய்துள்ளார்.    இதனால் ஊரில் உள்ளவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு,  பின்னர் சமாதானம் செய்துள்ளனர்.  ஆடலும் பாடலும் நிகழ்ச்சி முடிந்தவுடன்,  அங்கு சென்ற பிரபல ரெளடி ஜிம் மோகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அங்கிருந்த பரசுராமனை அரிவாளால் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  பரசுராமனின்  மனைவி மேகலாவை (30) வெட்டியதில்,  இடது கை துண்டானதாகக் கூறப்படுகிறது.  மேலும்,  சண்டையை தடுக்கச் சென்ற அண்ணாமலை(50). கோவிந்த் (55), புகழேந்தி (30),  முனியம்மாள் (45) ஆகிய 5 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்  ராஜபாண்டியன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  சாமல்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜிம் மோகன்(37), வெற்றிவேல்(25), வேடியப்பன்(45) ஆகிய மூன்று பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  ஜிம் மோகன் என்பவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. அவர் ரெளடிகள் பட்டியலிலும் உள்ளார்.  
இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  பரசுராமனின் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி, சாமல்பட்டியில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில்  ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com