திமுக கூட்டணி வென்றால்மத்திய, மாநில அரசு காலிப் பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தப்படும் 

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால், மத்திய,  மாநில அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால், மத்திய,  மாநில அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், அரூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக் கூட்டம், அக் கட்சியின் மாவட்டச் செயலர் பெ.சுப்பிரமணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பேசியது:
கடந்த காலங்களில் மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, தமிழகத்துக்கு எதையும் செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக என்ன செய்யவில்லை என்று அவர் கூறுவாரா?.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், சேலம்  ரயில்வே கோட்டம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள், ரூ. 1,550 கோடியில் ஜப்பான் நிதியுதவியுடன் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியது திமுக ஆட்சியில்தான்.
ஆனால், தற்போது மத்தியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைக்கும்  நீட் தேர்வை ரத்து செய்ததா? பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தியதா? கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து  உரிய நிதிகள் கிடைத்தனவா? கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு என்ன செய்தது? என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்.
சென்னை-சேலம் எட்டுவழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை பாமக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையாக  எதிர்த்தது. தருமபுரி எம்.பி.யான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். அதிமுக-பாஜக உடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு, பாமக வெளியிட்டுள்ள 10 அம்சக் கோரிக்கைகளில் எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிட்டது ஏன்? இந்த கேள்விகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பதிலளிக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்:  திமுக தலைமையிலான கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப திமுக வலியுறுத்தும். 
பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ. 3 லட்சம் செலவில் தரமான வீடுகள் கட்டித் தரப்படும். சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களின் வேலை நாள் 100-இலிருந்து 150 தினங்களாக உயர்த்தப்படும், மருந்து, மாத்திரைகள் விலைகள் குறைக்கப்படும். ஒரு கோடி சாலைப் பணியாளர்கள் நியமனம், ஆட்டோ,  டாக்சி தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.
தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் அரசை திமுக வலியுறுத்தும் என்றார் மு.க.ஸ்டாலின்.  இந்தக் கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com