நான் தருமபுரி மண்ணுக்கு மைந்தன்: அன்புமணி ராமதாஸ்

நான் தருமபுரி மண்ணுக்கு மைந்தன் என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசினார் அன்புமணி ராமதாஸ். 


நான் தருமபுரி மண்ணுக்கு மைந்தன் என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசினார் அன்புமணி ராமதாஸ். 
தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில், போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸை அறிமுகப்படுத்தும் கூட்டம் சனிக்கிழமை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.செம்மலை ஆகியோர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினர்.
இக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசியது: தருமபுரி தொகுதிக்கு 20 ஆண்டுகாலமாக நானும், 40 ஆண்டு காலமாக பாமக நிறுவனர் ராமதாஸும் வந்து கொண்டிருக்கிறோம். இந்த மாவட்ட மக்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக போராடி வருகிறோம். தற்போது, திமுக சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் படித்தவர். அவர், பிரசாரத்தின் போது, தன்னை மண்ணின் மைந்தன் எனவும், என்னை வேறு மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் கூறிவருகிறார். 
அவர் மண்ணின் மைந்தன் என்றால், நான் இந்த மண்ணுக்கு மைந்தன். தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மேட்டூர் பேரவைத் தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்தது. அங்கே எப்படி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பார். திமுக தலைவர், மகளிரணி தலைவியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிடாமல், கொளத்தூரிலும், தூத்துக்குடியிலும் ஏன் போட்டியிடுகின்றனர். இத்தகைய விமர்சனங்களைத் தவிர்த்து, தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதிகளில் வெற்றிப்பெறுவதில் நாம் கவனம் செலுத்துவோம். 
இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நானும், உயர் கல்வித் துறை அமைச்சரும் இணைந்து பணியாற்றுவோம். தற்போது தேர்தலில் வெற்றிப்பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார்.
இக் கூட்டத்தில் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. அயோத்தியப்பட்டணம் முதல் வாணியம்பாடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 
தருமபுரியிலிருந்து மொரப்பூர் ரயில்வே திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மொரப்பூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு ரயிலை நிறுத்தம் செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தவுடன் அது நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு அந்த ரயிலில் வரும் பயணிகள் தருமபுரிக்கு வருகை தர பேருந்து வசதி வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்த உடனே அக்கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. இவைத் தவிர, ஒளவையார் பள்ளிக்கு கூடுதல் இடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
எனவே, இந்த தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தல் ஆகிய தேர்தல் வெற்றிப்பெற ஒற்றுமையோடு உழைப்போம் என்றார்.
இக் கூட்டத்தில், பாஜக, தேமுதிக, தமாகா, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com