முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
பள்ளி வாகனங்கள் தணிக்கை
By DIN | Published On : 15th May 2019 08:18 AM | Last Updated : 15th May 2019 08:18 AM | அ+அ அ- |

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளி வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தணிக்கை செய்தனர். இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 34 வாகனங்களின் தகுதி சான்றிதழ்களை ரத்து செய்தனர்.
தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து தணிக்கை செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 140 பள்ளிகளின் 1,123 வாகனங்கள் தணிக்கைக்கு உள்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக 320 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அதில் பாதுகாப்பு குறைபாடுகள கண்டறியப்பட்ட 14 வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டன. மேலும், வாகன ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரின் உரிமங்கள் நடப்பில் உள்ளனவா என்பது குறித்தும் தணிக்கை செய்யப்பட்டது. பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்குவது குறித்து தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்... அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி காவல் ஆயுதப்படை மைதான வளாகத்தில் தணிக்கை பணி நடைபெற்றது. இதில் 238 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, குறைபாடுகள் கண்டறியப்பட்ட 17 வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டன. மேலும், வாகன ஓட்டுநர்களுக்கு தீயணைப்புத் துறையினர் மூலம் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆய்வுப் பணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆர்.செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என்.மணிமாறன், ஏ.ராஜாமணி, அன்புசெழியன், பன்னீர்செல்வம், கே.குமார், செந்தில்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் ராஜா, தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்ற தணிக்கையில் மொத்தம் 34 வாகனங்களின் தகுதி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், இந்தத் வாகனத் தணிக்கை மே 17, 24, 31 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.