8 வாக்குச்சாவடிகளில்மறுவாக்குப் பதிவுக்கானவாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு
By DIN | Published On : 15th May 2019 08:17 AM | Last Updated : 15th May 2019 08:17 AM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட டி.அய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிப்புதூர் ஆகிய இடங்களில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் மே 19 (ஞாயிற்றுக்கிழமை) மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல், தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல்களுக்கான மறுவாக்குப் பதிவு நடைபெறும் 8 வாக்குச் சாவடிகளிலும் 16 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதேபோல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், மாற்று தேவைக்காக 16 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா ராணி , உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.சுகுமார் ஆகியோர் முன்னிலையில், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.