தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் பரவலாக மழை

தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால், முதியவர்கள்,  பெண்கள்,  குழந்தைகள், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. 
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. பென்னாகரம்,  பாப்பிரெட்டிப்பட்டி,  வத்தல்மலை,  தொப்பூர், அரூர்,  தருமபுரி,  சின்னம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமாகவும், பலத்த  மழையும் பெய்துள்ளது. பாலக்கோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே  சாலையோரத்தில் மரம் சாய்ந்ததால், சிறிது நேரம் வாகனப்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பென்னாகரம் பகுதியில்... பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி, பெரும்பாலை பகுதியில்  இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னம்பள்ளி, பெத்தானூர்,  பெரும்பாலை  மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம்மழை பொழிவினால் சாலைகள் எங்கும் மழை நீர் வழிந்தோடியது.   ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. விளைநிலங்களில் சோளம், கம்பு மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்வதற்கு  இந்த மழை உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. கிருஷ்ணகிரி நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால்  மின் விநியோகம் தடைபட்டது. இம் மாவட்டத்தில்,  சூளகிரி, வேப்பனஅள்ளி, பர்கூர்,  மத்தூர், போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. 
பர்கூரில் நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால்,  பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால், பேருந்து நிலையம் குட்டை போல் காட்சி அளித்தது. பயணிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
அணைக்கு நீர்வரத்து... இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் விநாடிக்கு 105 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 42 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்மட்டம் 30.40 அடியாக இருந்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 4 நாள்களில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
தருமபுரி,  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த மழையால், குளிர்ந்த காற்று  வீசின.  விவசாயிகள் கோடை உழுவுப் பணியை தொடங்கவுள்ள நிலையில் மழை பெய்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com