தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 20th May 2019 09:38 AM | Last Updated : 20th May 2019 09:38 AM | அ+அ அ- |

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அக் கட்சியின் மாவட்ட அமைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இ.பி.புகழேந்தி பேசினார். கூட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் உள்ள 25 சதவீத இடஒதுக்கீட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுப்பதோடு, கட்டண வசூல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து அமல்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க ஒகேனக்கல் குடிநீரை அனைத்து கிராமங்களுக்கும் வழங்க
வேண்டும்.
மாவட்டத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். ஒகேனக்கல் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், எம்.சண்முகம், எம்.நவீன்குமார், டி.ஆர்.மாதேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.