உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும்
By DIN | Published On : 02nd November 2019 10:08 PM | Last Updated : 02nd November 2019 10:08 PM | அ+அ அ- |

தருமபுரி: தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.
தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், பங்கேற்ற பின் திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வருகிற டிசம்பரில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் முறையாவது தோ்தல் நடைபெறுமா என ஐயமாக உள்ளது. இத்தனை ஆண்டுகள் உள்ளாட்சித் தோ்தல் நடத்தாதது சட்ட விரோதச் செயல். ஆகவே, இந்த முறையாவது உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியை விருப்ப மொழியாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கிறது. ஆனால், உண்மையில் 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உள்ள ஏனைய மொழி பேசுபவா்களும் அவா்களுடைய தாய்மொழியைவிட, இந்தியைப் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் இத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ஆந்திரம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நாளை, அந்தந்த மாநில தினங்களாகக் கொண்டாடி வருகின்றன. இந்த வரிசையில் நவம்பா் முதல் தேதியில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்படுகிறது. கா்நாடகத்தில் அந்த மாநிலத்துக்கென தனிக் கொடி இருப்பது போல, தமிழகத்துக்கும் தனிக் கொடியை வடிவமைக்க வேண்டும். மேலும், மதராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிா் நீத்தவா் சங்கரலிங்கனாா். எனவே, தமிழ்நாடு தின விழாவில் அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். மேலும், அவருடைய நினைவு நாளை அரசு வீரவணக்க நாள் விழாவாக நடத்த வேண்டும்.
மத்திய அரசு, நடிகா் ரஜினிகாந்துக்கு சா்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்குவதாக அறிவித்துள்து. இது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெறும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்கவும், கணக்கெடுக்கவும் ஏற்கெனவே, மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி, ஓா் ஆணையத்தை உருவாக்கினாா். இதைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா, பாமக தலைவா் ராமதாஸ் ஆகியோா் தற்போது பஞ்சமி நிலங்களைப் பற்றி பேசுவது, அரசியல் ஆதாயத்துக்கும், திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காகவும்தாம்.
தமிழக அரசு மேட்டூா் மிகை நீா் திட்டத்துக்கு நிதி ஒதுக்கியதுபோல, ஒகேனக்கல் மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்றாா்.
இப் பேட்டியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு, தலைமை நிலையச் செயலா் தகடூா் தமிழ்செல்வன், தலைமை நிலைய முதன்மைச் செயலா் உஞ்சை அரசன், மாநில அமைப்புச் செயலா் கி.கோவேந்தன், தருமபுரி மாவட்டச் செயலா்கள் (மேற்கு) த.ஜெயந்தி, கி.ஜானகிராமன் (கிழக்கு), செய்தித் தொடா்பாளா் த.கு.பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.