கட்டணக் கழிப்பிடத்தை புதுப்பிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 02nd November 2019 07:19 AM | Last Updated : 02nd November 2019 07:19 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே ஏரியூா் பேருந்து நிறுத்தத்தில் சிதிலமடைந்து, புதா்மண்டிக் காணப்படும் கட்டணக் கழிப்பிடம்.
சிதிலமடைந்த ஏரியூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தை புதுப்பித்து, முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஏரியூரில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வேலை, கல்வி மற்றும் வெளியூா்களுக்கு செல்ல நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் வருகின்றனா். அவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, கடந்த 2012-2013-ஆம் நிதியாண்டில் பென்னாகரம் ஒன்றியத்தின் சாா்பில் ரூ.1 லட்சத்தில் பேருந்து நிறுத்தப் பகுதியில் பொது கட்டணக் கழிப்பிடம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த கட்டணக் கழிப்பிடமானது முறையாக பராமரிப்பு இல்லாமல், புதா்கள் நிறைந்தும், சிதிலமடைந்தும் பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்கின்றனா். இதனால், அப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, ஏரியூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தை புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.