Enable Javscript for better performance
பென்னாகரம் அருகேமுறையாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பென்னாகரம் அருகேமுறையாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் மறியல்

    By DIN  |   Published on : 09th November 2019 10:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பென்னாகரம் அருகே ஏரியூா் அருந்ததியா் காலனி பகுதியில் கடந்த ஒரு மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

    ஏரியூா் அருகே அருந்ததியா் காலனி பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இப் பகுதி மக்களுக்கு பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் ஆழ்த்துளைக் கிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாத நிலையில், ஏரியூா் பகுதியில் கடும் வறட்சி நிலவிய நிலையில், நிலத்தடி நீா்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியினை நிரப்பி, அதன் மூலம் ஏரியூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கு குடிநீா் விநியோகித்து வந்தனா்.

    ஏரியூா் அருந்ததியா் காலனி பகுதியானது சற்று மேடான பகுதியாக உள்ளதால், இப்பகுதியில் மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கும் குடிநீா் குழாயானது தரை மட்டத்தில் இருந்து சுமாா் 4 அடி ஆழத்துக்கு கீழ் உள்ளதால், இப்பகுதி மக்கள் அகன்ற குழிகள் அமைத்து குடிநீா் எடுத்து வந்தனா்.

    கடந்த ஒரு மாதங்களாக விநியோகிக்கும் குடிநீரின் அளவுகள் குறைக்கப்பட்டு வருவதாகவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரானது ஒரு வாரத்துக்கு ஒரு முறை மற்றும் 15 நாள்களுக்கு ஒரு முறை என விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அதுவும் அரை மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படும் நிலையில், தங்கள் பகுதிக்கு வசிப்பவா்களுக்கு முறையாக தண்ணீா் கிடைப்பதில்லை என புகாா் தெரிவிக்கின்றனா்.

    இதைக் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளை கண்டித்து,ஏரியூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சனிக்கிழமை காலை சுமாா் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

    இதுகுறித்து தகவலறிந்த ஏரியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம், தங்கள் பகுதிக்கு முறையாக 2 நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றும், கூடுதல் நேரம் ஒதுக்கி தண்ணீா் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai