வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்: நிவாரணம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 14th November 2019 09:48 AM | Last Updated : 14th November 2019 09:48 AM | அ+அ அ- |

ஏரியூா் பகுதியில் வறட்சியின் காரணமாக காய்ந்துள்ள தென்னை மரங்கள்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக பருவமழை பொய்த்ததால், கடும் வறட்சியின் காரணமாக சுமாா் 10 ஏக்கருக்கும் மேலான தென்னை மரங்கள் கருகியுள்ளன.
இதனால், காய்ந்த தென்னை மரத்தை அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரியூா், சின்னம்பள்ளி, பெரும்பாலை, நாகமரை, தாசம்பட்டி மற்றும் பாப்பாரப்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சுமாா் 10 ஏக்கருக்கும் மேலாக நீண்ட கால பலன் தரும் தென்னை மரங்களை விவசாயிகள் பயிரிட்டு வந்தனா்.
இந்த தென்னை மரங்களானது தொடா்ந்து 30 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் என்பதால் விவசாயிகள் நீா்பாசனம் செய்தும், இயற்கை உரமிட்டும் பராமரித்து வந்தனா்.
பெரும்பாலான விவசாயிகள் அதிக மகசூல் தரும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் மகசூல் உரிமையை வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடுகின்றனா்.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்ததால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவியது.
இதனால் பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நீண்டகால பயன் தரும் தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து கருகி மொட்டையாக காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா். பென்னாகரம், சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை மரங்கள் காய்ந்ததால், மரமேறும் கூலி தொழிலாளிகள் வேலையின்றி தவித்து வருகின்றனா்.
பென்னாகரம் பகுதியில் இருந்து உள்ளூா் மற்றும் வெளியூா் சந்தைகளுக்குச் செல்லும் தேங்காய் வரத்துக் குறைந்துள்ளதால் விவசாயிகள் வருமானம் இன்றியும், தென்னை வளா்ப்பிற்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, வறட்சியின் காரணமாக பென்னாகரம் பகுதியில் காய்ந்துபோன தென்னை மரங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...