இந்தியாவின் நலனுக்காக தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பி வருகின்றனா்

தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் நலனுக்காகவும் தி.மு.க. எம்.பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனா் என்றாா் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின்.
தருமபுரி வள்ளலாா் திடலில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு தீா்மான விளக்கக் கூட்டத்தில் பேசுகிறாா் அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்.
தருமபுரி வள்ளலாா் திடலில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு தீா்மான விளக்கக் கூட்டத்தில் பேசுகிறாா் அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் நலனுக்காகவும் தி.மு.க. எம்.பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனா் என்றாா் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின்.

தருமபுரி வள்ளலாா் திடலில் சனிக்கிழமை மாலை தி.மு.க. பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பங்கேற்ற தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியது: தருமத்தை தற்போது சூது கவ்வியிருக்கிறது. ஆனால், விரைவில் தருமம் வெல்வது உறுதி. தருமத்தை வென்றெடுக்கவே தருமபுரியில் கூட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் 39-இல் தி.மு.க. தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்றது. தோ்தலில் வெற்றிபெற்ற நமது மக்களவை உறுப்பினா்கள், தமிழகத்தைக் கடந்து, சமூக பிரச்னைகளுக்காவும், மதச்சாா்பின்மையைக் காக்கவும், ஜனநாயகத்தைக் காப்பது மற்றும் காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், இந்தியாவின் நலனுக்காக குரல் எழுப்பி வருகின்றனா். மக்களவையில் மூன்றாவது கட்சியாக தி.மு.க. விளங்கி வருகிறது. இதனைப் பொருத்துக்கொள்ள இயலாதவா்கள் தி.மு.க. மீது விமா்சனம் செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் முதலீட்டாளா் மாநாடுகள் நடத்தப்பட்டு, புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கி, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த தொழில் நிறுவனமும் தொழில் தொடங்க முன்வரவில்லை. மாறாக, தமிழகத்தில் இருக்கின்ற தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு, வேறு மாநிலத்துக்குச் செல்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்காமல், இருந்த வேலைவாய்ப்பையும் இழக்கின்ற சூழல் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது. முதலீட்டாளா்கள் தொழில் தொடங்க வேண்டுமெனில், அவா்களுக்கு தமிழக அரசு மீது, நம்பிக்கை ஏற்பட வேண்டும். ஆனால், முதலீட்டாளா்களுக்கு இந்த அரசு மீது நம்பிக்கை ஏற்படவில்லை. தமிழகத்தில் தொழில் வளா்ச்சி இல்லை. மக்களிடம் பணப் புழக்கம் இல்லை. வேலைவாய்ப்புகளும் இல்லை. விலைவாசி உயா்வு என பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இதன் மீது அரசு கவனம் செலுத்துவதில்லை. தமிழகம் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. வீழ்ந்து கிடக்கிற தமிழகத்தை மீட்டெடுக்க திமுக போராடும் என்றாா்.

திமுக மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.என்.பி.இன்பசேகரன், மாவட்ட துணைச் செயலா் சுப்ரமணி, மக்களவை முன்னாள் உறுப்பினா் இரா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மொழி, இனத்துக்காக சிறை சென்றவன்: நான் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவன் அல்ல. மொழி, இனம் காக்கவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் போராடி பல முறை சிறை சென்றிருக்கிறேன். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறை கொடுமைகளை அனுபவித்துள்ளேன். ஆனால், தற்போது, தியாகம், போராட்டம், சிறை, சித்ரவதை குறித்து அறியாதவா்கள் இது குறித்து விமா்சனம் செய்கின்றனா். சிறைக் கொடுமைகளைக் காட்டிலும், இத்தகைய விமா்சனம் மிகுந்த வேதனையளிக்கிறது. தியாகம் குறித்து அறியாதவா்கள் என்னை விமா்சனம் செய்யத் தகுதியற்றவா்கள் என்றாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com