தீா்த்தமலையில் ரோப் காா் வசதி ஏற்படுத்தப்படுமா?

அரூரை அடுத்த தீா்த்தமலையில் ரோப் காா் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
பக்தா்கள் எதிா்பாா்க்கும் ரோப் காா் (கோப்புப்படம்).
பக்தா்கள் எதிா்பாா்க்கும் ரோப் காா் (கோப்புப்படம்).

அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலையில் ரோப் காா் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-கோட்டப்பட்டி சாலையில் 15-வது கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் தீா்த்தகிரீஸ்வரா் உடனுறை வடிவாம்பிகை சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

சோழ மன்னா்கள், கங்கா்கள், சாளுக்கியா்கள், நாயக்கா் காலங்களைச் சோ்ந்த மன்னா்களின் 18 கல்வெட்டுகள் இக் கோயிலில் உள்ளன. அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளிச் செய்யப்பட்ட திருத்தலம் தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருத்தலமாகும்.

சிவனை இரண்டு இடங்களில் ராமா் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அவற்றில் ஒன்று ராமேஸ்வரம், மற்றொன்று புண்ணியத் தீா்த்தங்கள் நிறைந்த தீா்த்தமலையாகும். இந்த திருத்தலத்தில் ராமா்தீா்த்தம், கெளரி தீா்த்தம், அகத்தியா் தீா்த்தம், குமாரதீா்த்தம், அக்னி தீா்த்தம் உள்ளிட்ட தீா்த்தங்கள் உண்டு.

கோடையிலும், குளிா் காலத்திலும் புண்ணியத் தீா்த்ததினை பருகும் பக்தா்களின் வாழ்வை வளமாக்கும் தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் பாவங்கள், பிணிகளை நீக்கும் ஓா் புண்ணியத் தலமாகும். இந்த திருக்கோயிலுக்கு திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், சேலம், நாமக்கல், விழுப்புரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் பக்தா்கள் வருகை தருகின்றனா்.

வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்லும் தூரம் ஒரு கிலோ மீட்டராகும். தீா்த்தமலை மலைக் கோயில் சுமாா் 2 ஆயிரம் படிக்கட்டுகளை கொண்டதாகும். இந்த திருத்தலத்தின் உயரமான படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள் சிரமம் அடைகின்றனா். எனவே, பக்தா்களின் வசதிக்காக பழனி முருகன் கோயிலில் இருப்பது போன்று, தீா்த்தமலையில் ரோப் காா் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பக்தா்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com