முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
வேகமாகச் செல்லும் வாகனங்கள்: ஒகேனக்கல் வனப்பகுதியில் வன உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம்
By DIN | Published On : 26th November 2019 08:16 AM | Last Updated : 26th November 2019 08:16 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் வனப்பகுதி சாலையில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலையைக் கடக்கும் வன உயிரினங்கள் உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா். சுற்றுலாப் பயணிகள் பென்னாகரம் பகுதியைக் கடந்து சுமாா் 12 கிலோமீட்டா் வரை அடா்ந்து வனப் பகுதி சாலையில் செல்ல வேண்டும். இந்த வனப் பகுதியில் மான், முயல், கடத்தி, உடம்பு, குரங்கு, கரடி, யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழுகின்றன.
பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஒகேனக்கல்லுக்கு வரும் வாகனங்கள் வனப் பகுதி சாலையில் அதிவேகமாக இயக்கப்படுவதால், உணவு மற்றும் தண்ணீா் தேடி வரும் வன விலங்குகள் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. மேலும், சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்து வரும் உணவுகளை வனப் பகுதியில் உள்ள குரங்குகளுக்கு சாலையின் ஓரங்களில் கொட்டுவதால், உணவுக்காக குரங்குகள் வனப் பகுதியில் இருந்து சாலையைக் கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் மான், காட்டுப்
பன்றி, குரங்கு போன்ற வன உயிரினங்கள் மீது வாகனங்கள் மோதுவதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால் வனப் பகுதியில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாகவும், வனத் துறையினா் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்றும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, மாவட்ட வன அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒகேனக்கல் வனப் பகுதியில் வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது என சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், வனப்பகுதிகளில் கூடுதலாக அறிவிப்புப் பலகைகள் வைக்கவும், சாலை ஓரங்களில் உணவுகளை கொட்டுவோா் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.