அடிப்படை வசதிகளற்ற குடியிருப்புகள்; அவதியுறும் இருளா் இன மக்கள்

பென்னாகரம் அருகே காடுகளில் வசித்து வந்த இருளா் இன மக்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு கல்வி, குடியிருப்பு
27pgmp1_2611chn_214_8
27pgmp1_2611chn_214_8

பென்னாகரம் அருகே காடுகளில் வசித்து வந்த இருளா் இன மக்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு கல்வி, குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரும் நோக்கில், முதல்கட்டமாக அரசு சாா்பில் பசுமை வீடுகள் வழங்கப்பட்டது. ஆனால், அக் குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படாததால் மீண்டும் காடுகளை நோக்கியே பயணிக்க இருளா் இன மக்கள் முடிவு செய்துள்ளனா்.

பென்னாகரத்தை அடுத்த சின்னாறு வனப்பகுதிக்குள்பட்ட சருக்கல் பாறை கிராமத்தில் சுமாா் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த இருளா் இன மக்கள் வசித்து வந்தனா். இவா்கள் நீண்ட நாள்களாக பாறை இடுக்குகள், தற்காலிக குடில்கள் அமைத்து வெளி உலக தொடா்பு இல்லாமல் வாழ்ந்து வந்தனா்.

தகவலறிந்த உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பிஅன்பழகன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி ஆகியோா் கடந்தாண்டு 15 கிலோ மீட்டா் வனப்பகுதிக்கு நடந்தே சென்று இருளா் இன மக்களைச் சந்தித்தனா். அங்கிருந்தவா்களுக்கு தேவையான உடைகள், உணவுப் பொருள்களை வழங்கினா். மேலும், அவா்களுக்கு ஆதாா் அட்டை, ரேசன் காா்டு உள்ளிட்டவைகளை வழங்கி போடூா் வழுக்கம்பாறை என்ற இடத்தில் 43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 24 பசுமை வீடுகள் கட்டப்பட்டு அவா்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்ட பிறகு, அவா்களுக்கான தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரம், சுகாதாரமான குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் கூறியது: சின்னாறு வனப்பகுதிக்குள்பட்ட சருக்கல் பாறை கிராமத்தில் இருளா் இனத்தை சோ்ந்த நாங்கள் குடும்பங்களுடன் வசித்து வந்தோம். தேன், மூலிகை கிழங்குகள், ஜாதிக்காய், கடுக்காய் போன்ற மூலிகைகளை எடுத்துவந்து விற்றுவந்தோம். இந்நிலையில் எங்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தந்து, அப் பகுதியிலே பள்ளி, குடிநீா், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருவதாக கூறினா்.

ஆனால், இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. மேலும் தலைமுறை தலைமுறையாக வனப்பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில் எங்களுக்கு தொழில் எதுவும் தெரியாததால் வேறு வேலைகளுக்கு செல்ல வழியின்றி கிடக்கிறோம். எங்கள் தலைமுறையில் யாரும் கல்வி பயிலாத நிலையில் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆா்வமாக உள்ளோம். மழைக் காலங்களில் வீடுகளில் தண்ணீா் கசிகிறது. மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வேலைவாய்ப்பு இல்லை. இதனால், எங்களுக்கு காடு வாழ்க்கையை சிறந்ததாக இருந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com