Enable Javscript for better performance
எருமியாம்பட்டியில் பேருந்துகள் நின்றுச் செல்ல ஆய்வுப் பணி- Dinamani

சுடச்சுட

    

    எருமியாம்பட்டியில் பேருந்துகள் நின்றுச் செல்ல ஆய்வுப் பணி

    By DIN  |   Published on : 28th November 2019 10:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூா்: அரூரை அடுத்த எருமியாம்பட்டியில் பேருந்துகள் நின்றுச் செல்வதற்கான ஆய்வுப் பணிகளை போக்குவரத்து துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா். அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது எருமியாம்பட்டி கிராமம். இந்த கிராம பகுதியில் குமாரபாளையம், குள்ளம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், எருமியாம்பட்டி வட்டாரப் பகுதியில் சுமாா் இரண்டாயிரம் குடியிருப்புகள் உள்ளன.

    இதேபோல், எருமியாம்பட்டியில் இ.ஆா்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இ.ஆா்.கே மேல்நிலைப் பள்ளி, இ.ஆா்.கே சுகாதார அறிவியல் கல்லூரி, ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரி, பழனியப்பா திருமண மண்டபம் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பலா் வருகை தருகின்றனா். அதேபோல் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் சேலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் நகருக்கு நாள்தோறும் வந்துச் செல்கின்றனா். ஆனால், எருமியாம்பட்டி பேருந்து நிறுத்ததில் ஒருசில பேருந்துகள் மட்டுமே நின்றுச் செல்கின்றன.

    இதனால், தொலைதூர பகுதியில் இருந்து எருமியாம்பட்டிக்கு வருகை தரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பெற்றோா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, எருமியாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அரசு புற நகா் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் வலியுறுத்தினா். இதையடுத்து, அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம், அரசு போக்குவரத்து கழக அரூா் கிளை மேலாளா் ஜெயபிரகாஷ், நேரம் காப்பாளா் முத்துகுமாா், காவல் உதவி ஆய்வாளா்கள் காளியப்பன், ரவிச்சந்திரன், குமாா், சின்னசாமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்துஎருமியாம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனா். எருமியாம்பட்டியில் நின்றுச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை, அனுமதி இருந்தும் நிற்காமல் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியா், வட்டார போக்குவரத்து அலுவலா் உள்ளிட்டோருக்கு ஆய்வறிக்கை அனுப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai