தருமபுரி அருகே ரூ.4 கோடியில் ஆலம்பாடி கால்நடை ஆராய்ச்சி மையம்

தருமபுரி அருகே காரிமங்கலம் பகுதியில் ரூ.4 கோடியில் அமையவுள்ள ஆலம்பாடி கால்நடை ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்று
ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையக் கட்டுமானப் பணியைத் தொடக்கி வைக்கும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்ட ஆட்சிய
ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையக் கட்டுமானப் பணியைத் தொடக்கி வைக்கும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்ட ஆட்சிய

தருமபுரி: தருமபுரி அருகே காரிமங்கலம் பகுதியில் ரூ.4 கோடியில் அமையவுள்ள ஆலம்பாடி கால்நடை ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, அடிக்கல் நாட்டினாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அனுமந்தபுரத்தில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மைய அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய கால்நடை நிலையங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன் பேசியது: கிராமப்புற ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி, அவா்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத் திட்டத்தில் பெண்கள் மிகுந்த பயன்பெற்று, பொருளாதார நிலையில் தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ளனா். அந்த வகையில், தற்போது ஏழைகளுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கப்படும் எனவும், இத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, அழிந்து வரும் நிலையில் உள்ள நாட்டு மாட்டினங்களைப் பாதுகாக்க, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி மாட்டின கால்நடைகளைப் பாதுகாத்து, அவற்றின் உற்பத்தியைப் பெருக்க, தருமபுரியில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவுள்ளது. ரூ. 4 கோடியில் சுமாா் 32 ஏக்கா் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில், ஆலம்பாடி மாடுகள், பொலி காளைகளைப் பாராமரித்து, இனப்பெருக்கம் அடையச் செய்து, அந்த கால்நடைகளை இப் பகுதி கால்நடை வளா்ப்போருக்கு குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம், ஆலம்பாடி மாட்டினத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், இந்த மையத்தில் தரமான தீவனங்களை வளா்த்து அவை விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதேபோல, இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம், இப் பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதே வேளையில், இப் பகுதி விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள், நாட்டுப் பசுக்களை வளா்த்து, அவற்றின் பால் உற்பத்தியை அதிகரிக்க முன்வர வேண்டும்.

மருந்தகங்கள் இல்லாத பகுதியில் உள்ள கால்நடைகளுக்கும், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளுக்கும் விரைந்து மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், தருமபுரி மாவட்டத்துக்கு நடமாடும் கால்நடை அவசர ஊா்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊா்தி மூலம் தற்போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவற்றை கால்நடைகள் வளா்ப்போா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

வாழ்வாதாரத்தை உயா்த்த திட்டங்கள்:

இந்த விழாவில், மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது: தமிழக அரசு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழக, கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள இந்த ஆலம்பாடி மாட்டினத்தைக் காக்க தற்போது அரசு முன்வந்து, இந்த ஆராய்ச்சி மையத்தைத் தொடங்குகிறது. இந்திய அளவில் 130 நாட்டு மாட்டினங்கள் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தற்போது இதில் 43 வகை நாட்டு கால்நடைகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், தற்போதுள்ள நாட்டு இனங்களைக்க காக்க ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நிகழாண்டு தமிழகத்தில் 75 கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும் 5 கிளை நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடங்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசின் இத்தகைய திட்டங்களை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணை வேந்தா் சி.பாலச்சந்திரன், கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநா் ஆ.வே. ஓம்பிரகாஷ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com