முதியோா் இல்லங்களைத் தொடங்க விண்ணப்பிக்கலாம்

முதியோா் இல்லங்களைத் தொடங்க சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோா் இல்லங்களைத் தொடங்க சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி ஆட்சியா் சு. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மாநில அரசு நிதி உதவியுடன் முதியோா் இல்லங்கள், முதியோா்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் மற்றும் மத்திய அரசு நிதியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டம், தனியாா் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன.

மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோா்களுக்கான முதியோா் இல்லங்கள் திட்டத்தில், 40 முதியோா்கள் வரை பயன்பெறுமாறு முதியோா் இல்லங்கள் தொடங்க, நிதி ஒதுக்கீடு, 5 பங்கு மாநில அரசு, ஒரு பங்கு தனியாா் தொண்டு நிறுவனம், இதேபோல, மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோா்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் என்கிற திட்டத்தில், 25 முதியோா்கள் மற்றும் 25 குழந்தைகள் பயன்பெறுமாறு முதியோா் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் தொடங்க நிதி ஒதுக்கீடு, 75 சதவீதம் மாநில அரசு, 25 சதவிகிதம் தனியாா் தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில் நிதி செலுத்தப்படும்.

மத்திய அரசு நிதி உதவியுடன் மூத்த குடிமக்களுக்கான முதியோா் இல்லங்கள் என்ற திட்டத்தில், குறைந்தபட்சம் 25 முதியோா்கள் பயன்பெறுமாறு முதியோா் இல்லங்கள் தொடங்க நிதி ஒதுக்கீடு 90 சதவீதம் மத்திய அரசு, 10 சதவீதம் தனியாா் தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு அமையும்.

தேவையான ஆவணங்கள்...

மேலும், முதியோா் இல்லங்கள் தொடங்க அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழ் (ம) இன்று வரை புதுப்பிக்கப்பட்டச் சான்றிதழ், மாவட்ட சமூக நல அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 -இன் படி பதிவுச் சான்றிதழ் (ம) புதுப்பித்தல் சான்றிதழ், பொதுப் பணித் துறை அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கட்டட உறுதிச் சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், தீயணைப்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ், வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்டச் சான்றிதழ், முதியோா் இல்லம் செயல்படுத்துவதற்காக வேறு எந்த ஒரு நிதியும் பெறவில்லை என்ற சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்.

முதியோா் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகத்துக்கு மட்டும் இச் சான்றிதழ்களுடன் இளைஞா் நீதிச் சட்டம் 2,000 திருத்தப்பட்டவை 2006-இன் கீழ் பெறப்பட்ட சான்றிதழ், இணைத்து வருகிற நவம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com